யூத்ஃபுல் விகடனில் தகடூர் நிரல்
Google Buzz Logo

சமீபத்தில் லக்கிலுக்கின் டமாரு கொமாரு கதையை படிக்க யூத்ஃபுல் விகடன் வலைத்தளத்தில் பெயர் பதிந்தேன். பெயரை தமிழில் தட்டச்சிட வசதி செய்திருந்தனர். ஆர்வத்துடன் நிரலை பார்த்தபோது மகிழ்ந்தேன். அது தகடூரின் நிரல்.

GPL கட்டற்ற உரிமத்தின் அடிப்படையில் வெளியீட்டுள்ள இந்த நிரலில் கூறப்பட்ட விதி:

"Further to the terms mentioned you should leave this copyright
notice intact, stating me as the original author."
என்பதை மதித்து நிரலில் GPL கட்டற்ற உரிம உரையை நீக்காமல் பயனர் பதிவு பக்கத்தில் பயன்படுத்தியுள்ளனர். அதற்காக பாராட்டுக்கள்.

அதே சமயத்தில் பின்னூட்டப் பெட்டியில் தமிழ் தட்டச்சிட வசதி செய்த நிரலாளருக்கு கட்டற்ற மென்பொருளின் அடிப்படை தெரியவில்லை என நினைக்கிறேன். தகடூரின் நிரலை மாறிகளின் பெயரை மட்டும் குறுக்கி GPL கட்டற்ற உரிம உரையை நீக்கிவிட்டு பயன்படுத்தியுள்ளனர்.

யூத்ஃபுல் விகடன், தகடூர் தமிழ் மாற்றியின் நிரல் பயன்பாட்டின் ஒரு பகுதியில் GPL கட்டற்ற உரிமத்தின் விதிகளை பின்பற்றியதற்கு பாராட்டுக்களையும் இன்னொரு பகுதியில் அதன் விதிகளை மீறியதற்காக கடுமையான கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்.

விகடன் தரப்பிலோ அதன் நிரலர் தரப்பிலோ தகடூர் நிரலை பயன்படுத்துவது குறித்து இது வரை எனக்கு மின்மடல் ஏதும் அனுப்பப்படவில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

எனக்கு மின்மடலிடுவது கட்டாயமில்லை எனினும் தகடூர் நிரலை பயன்படுத்துவோர் குறித்த புள்ளி விவரத்துக்கும், நிரலை புதுப்பிக்கும் போது பயனர்களுக்கு புதிய நிரல் குறித்து அறிவிக்கவும் இது உதவும்.