தமிழ்க்காரன் புத்திய காமிச்சிட்டியே
Google Buzz Logo

"____க்கெல்லாம் ஆட்டோ போவாது சார். கூட 30 ரூபா ஆவும்".

"இத நீங்க கன்டோன்மன்ட் ப்ரீ பெயிட்ல ஏறும் போதே சொல்லியிருக்கனும். அங்கே பில் போட்டு ஏறினப்போ பேசாம இருந்துட்டு இப்ப ஏன் தகராறு பண்றீங்க?"

"அந்த #$#%$# பசங்க அப்படித்தான் கொறச்சி போட்டு எங்க வயத்துல அடிக்கறாங்க... ஆட்டோ போவாது சார்... எறங்கீக்கங்க"

"ஏங்க, நான் ____க்குன்னு பில் போட்டு தானே வாங்கியிருக்கேன். இன்னும் ஒரு கிலோ மீட்டர் போகனும்... பாதிவழியில இப்படி பண்றீங்க. சார்ஜ் அதிகமா வேணும்னா சங்கம் வச்சிருக்கீங்க இல்ல.. ப்ரீ பெய்ட் ஆளுங்களோட பேசி அதிகம் பண்ணிக்க வேண்டியது தானே... ஏங்க என்னை மாதிரி கஸ்டமர் கிட்ட ராவுடி பண்றீங்க"

"#$#%$# பசங்க ஒக்காந்து பில் போட்டுடறாங்க. இவ்வளவு தூரத்துக்கு அவ்வளவு கம்மியா வராது சார்"

"ஏம்பா யாரோ புதுசா பெங்களூரு வர்றவன் கிட்ட நீ அப்படி சொன்னா நம்புவான், நான் பெங்களூர்க்கு பழைய ஆளு. கன்டோன்மன்ட்ல இருந்து ____க்கு சரியா 11 கிலோமீட்டர் வரும். இப்ப 10 கிலோமீட்டர்ல நிக்கறோம் கிலோமீட்டருக்கு 6 ரூபான்னு பாத்தா சரியாத்தானே போட்டு இருக்கு பில்லுல?"

"தமிழ்க்காரன் புத்திய காமிச்சிட்டியே"

"என்னய்யா சம்பந்தமில்லாம ஒளர்ற... இதுல தமிழ்காரன் புத்தி எங்க வந்தது? 'வட்டிப் பணம் வாங்கறதே பாவம்னு ____ல சொல்லியிருக்கு'... குடுக்க வேண்டியதவிட அதிக காசு கேக்கறயே... இது எந்த புத்தி ? நீ உண்மையிலேயே ____தானா... இல்லை அது வெறும் அடையாளமா?"

"#$#%$# அதெல்லாம் முடியாது இங்கேயே எறங்கிக்க... காசு குடு"

ஆட்டோவை விட்டு இறங்கி நூறு ரூபாய் நோட்டை தந்தேன்.

"சில்லரை இல்ல".

பக்கத்திலிருந்த செருப்பு தைக்கும் கன்னடரிடம் சில்லரை மாற்றி ஆட்டோக்காரனிடம் "நல்லாயிரு" என்று சொல்லி சரியாய் தரவேண்டிய பணத்தை தந்தேன். நடந்ததை கவனித்துக் கொண்டிருந்த அந்த செருப்பு தைக்கும் கன்னடரும் "சில ஆட்டோக்காரனுங்க எப்பவுமே இப்படித்தாங்க பாதி வழியில கழுத்தறுப்பாங்க" என்று தத்தைத் தமிழில் சொன்னார்.

"தமிழ்க்காரன் புத்திய காமிச்சிட்டியே" சொன்னது கன்னடர் இல்லை... கர்னாடகத்துக்கு என்னைப் போலவே பிழைக்க வந்த ஒரு வேற்றுமொழிக்காரன்.

ஏற்கனவே நன்கு படித்த தகவல் தொழில்நுட்ப "கன்னடக் கூட்டா" மக்களின் "அறிவுக்கு ஒவ்வாத" பேரணி... அதில் அவர்கள் எழுப்பிய கோஷத்தால் வருத்தத்திலிருந்தேன்.

மறுபடி ஒரு முறை மனம் "I should quit this place at the earliest possible" என்று சொல்லிற்று. ஏனோ தெரியவில்லை ஹைத்ராபாத்தில் இருந்த வரை என்றுமே இப்படி எண்ணியதில்லை.

17 கருத்து(க்கள்):

வினையூக்கி |

//மறுபடி ஒரு முறை மனம் "I should quit this place at the earliest possible" என்று சொல்லிற்று. ஏனோ தெரியவில்லை//
நான் பெங்களூரில் ஒரு மாதம் இருந்த போது உணர்ந்தது.
:( :(


G.Ragavan |

கோபி, இது உண்மையான நிகழ்வா? கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக பெங்களூரின் மாற்றங்களைக் கவனித்துக் கொண்டு வருகிறேன். என்னுடைய கவனிப்புகள் எவ்வளவு சரியென்று தெரியவில்லை. ஆனால் அவை என்னுடைய கவனிப்புகள் ஆகையால் சொல்லி விடுகிறேன்.

நான் வந்த புதிதில் பெங்களூரில் மீட்டர் போட்டுத்தான் ஆட்டோ ஓடும். அப்பொழுது பெரும்பாலும் கன்னடர்கள்தான் ஆட்டோ டிரைவர்கள். உள்ளூர்க்காரர்கள். கொஞ்சம் தமிழர்களும் கொஞ்சம் முஸ்லீம்களும் இருப்பார்கள். நானே ஒரு முறை ஆட்டோவில் பிரச்சனையில் சிக்கிக் கொண்ட பொழுதும் ஆட்டோக்காரர் ஒழுங்காகக் கொண்டு சேர்த்தார்.

ஆனால் இன்று? பலரும் பல மாநிலங்களில் இருந்தும் ஆட்டோ ஓட்டுகிறார்கள். மீட்டர் என்பது அரிதாகிக் கொண்டிருக்கிறது. டபுள் ட்ரிபிள் எல்லாம் சாதாரணமாகிக் கொண்டு வருகிறது. காலையில் மடிவாளாவில் இறங்கும் பொழுது மீட்டரில் ஐம்பது ரூபாய் வரும் இடத்திற்குக் கூசாமல் 150 கேட்பார்கள். பேரம் பேசி 100-120க்கு வருவார்கள். சரி. அதாவது விடியற்காலை நேரம். டபுள் என்றாலும் 100 ஆகி விடுகிறதே.

பொதுவில் வெளியில் சென்றால் ஆட்டோ, கடை எதுவானாலும் கன்னடத்திலேயே பேசுவதுண்டு. தெரிந்த தமிழ்க்கடைகளில் மட்டுமே தமிழில் கேட்பது. மற்ற இடங்களில் கன்னடம் புழங்குவதுதான் சரி. குறிப்பாக நீங்கள் சொல்லும் ஆட்டோக்காரர்களிடம் கன்னடத்தில் புழங்குவது நல்ல பயனைத் தரும்.


பினாத்தல் சுரேஷ் |

என்ன தலைவர் இப்படிச் சொல்லிட்டீங்க, ஒரு வேற்றுமொழி ஆட்டோக்காரனும், ஒரு செருப்பு தைத்த மண்ணின் மைந்தனையும் மட்டுமே வைத்து ஜெனரலைஸ் பண்றீங்களோன்னு தோணுது.. ஆனா அங்கே நான் இருந்தா என்ன யோசிச்சிருப்பேன்னு யோசிச்சுப் பாத்தும் புரியலை! எங்கேயோ உதைக்குது..

quitting decisionக்கு இது மட்டுமே காரணமாக இருக்காது.. இன்னுமொரு துண்டு வைக்கோலோ?


தகடூர் கோபி(Gopi) |

வினையூக்கி,

பெங்களூரைப் பொறுத்தவரை எனக்கு ஹைத்ராபாத்துக்கு முன்/ஹைத்ராபாத்துக்கு பின் என இரு விதமான கருத்துக்கள் உண்டு. என் மனதில் "ஹைத்ராபாத்துக்கு பின்" கருத்துக்கள் சில நாட்களாய் வலுவடைந்து வருகிறது.


தகடூர் கோபி(Gopi) |

ஜி.ரா,

இன்று எனக்கு நேர்ந்தது.

//நான் வந்த புதிதில் பெங்களூரில் மீட்டர் போட்டுத்தான் ஆட்டோ ஓடும்.//

ஆம். மூன்றாண்டுகளுக்கு முன் நான் கூட நேரில் கண்டிருக்கிறேன். இப்போதும் கூட மீட்டர் காசு மட்டும் வாங்கி மீதி சில்லரையை சரியாக திருப்பித் தரும் ஆட்டோக்காரர்கள் இருக்கிறார்கள். எண்ணிக்கையில் தான் மிகக் குறைவு.

//காலையில் மடிவாளாவில் இறங்கும் பொழுது மீட்டரில் ஐம்பது ரூபாய் வரும் இடத்திற்குக் கூசாமல் 150 கேட்பார்கள். பேரம் பேசி 100-120க்கு வருவார்கள்.//

இதற்காகத்தான் நான் பெரும்பாலும் ப்ரீ பெய்ட் ஆட்டோவில் வருகிறேன். அதிலும் சிலர் இப்படி இருக்கிறார்கள். :(

//நீங்கள் சொல்லும் ஆட்டோக்காரர்களிடம் கன்னடத்தில் புழங்குவது நல்ல பயனைத் தரும்.//

நான் முடிந்தவரை கன்னடத்தில் பேசினாலும் சில சமயம் ஆட்டோவில் வரும்போது செல்பேசி அழைத்தால் தமிழில் தானே பேச வேண்டியிருக்கிறது... இன்றும் அது தான் நடந்தது :(


தகடூர் கோபி(Gopi) |

பினாத்தலாரே,

பொதுமைப்படுத்தலைங்க, மாறாக எதையுமே தனிப்பட்ட வகையில் அனுக வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

பொதுவா எல்லா கன்னடரும் தமிழருக்கு எதிரி என்றோ மற்றவரெல்லாம் நடுநிலை/நண்பர் என்றோ பொதுமைப்படுத்தக் கூடாதுன்னு தான் நானும் சொல்றேன்.

//quitting decisionக்கு இது மட்டுமே காரணமாக இருக்காது.. இன்னுமொரு துண்டு வைக்கோலோ?//

சரியாச் சொன்னீங்க. பலமுறை நினைத்தது... "இன்னுமொரு முறை" உறுதியானது. ஆனால் இப்போதைக்கு (குறைந்த பட்சம் இவ்வருடம்) வெளியேற இயலாது :(


enRenRum-anbudan.BALA |

கோபி,
ஏதோ குமுதம் குட்டிக் கதை மாதிரி இருந்து :)

Life is like that, I suppose !


துளசி கோபால் |

இப்பத்தான் ஒரு ரெண்டு மாசமா பெங்களூரு ஆட்டோக்காரர்களை 'மனசில்'
புகழ்ந்துகிட்டு இருந்தேன். அதுக்கும் ஆப்பா?


Voice on Wings |

நீங்களும் இங்க வந்துட்டீங்களா? நல்வரவு :)


தகடூர் கோபி(Gopi) |

எ.அ.பாலா,

அடப்பாவி, கண்ட ஆட்டோக்காரன் வாயில விழுந்ததைப் பத்தி நான் சொன்னா உமக்கு கதை மாதிரி இருக்கா?

//Life is like that, I suppose !//

Correct! we feel better when we share it with someone :-).

துளசியக்கா,

நீங்க புகழுற மாதிரி ஆட்களும் இன்னும் இருக்காங்க. நானும் நேரில் பார்த்திருக்கிறேன்.

நேத்து நடந்தது ஒரு தனிப்பட்ட நிகழ்வு. அதை நம்ம வலைப்பதிவர்கள் கிட்ட பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.

மத்தபடி பெங்களூர் நல்ல/மோசமான ஊர் அப்படிங்கறது அவரவர் பார்வைப்படி.

VoW,

நான் பெங்களூருக்கு பணிமாற்றலில் வந்து எட்டு மாசமாச்சிங்க.

ஆகா, நீங்களும் பெங்களூர் தானா?
தெரிந்திருந்தால் தமிழ்விசை புதிய வெளியீட்டின் உருவாக்கத்தின் போதே நேரில் சந்தித்து உரையாடியிருக்கலாம்.

ஓய்வு கிடைக்கும் போது சொல்லுங்கள் சந்திக்க விரும்புகிறேன்.


ஜோ/Joe |

ஜி.ராகவன்,
ஒரு சின்ன சந்தேகம் .நீங்கள் தமிழர்,கன்னடர் ,முஸ்லீம் என்று குறிப்பிடிருக்கிறீர்கள் .முஸ்லீம்கள் தமிழர் ,கன்னடரில் சேர்த்தி இல்லியா ? இலங்கை போல இங்கும் முஸ்லீம்கள் தனி இனமா?


மெளலி (மதுரையம்பதி) |

கோபி,

நானும் இங்கு 15 வருடங்களாக வசிக்கிறேன்....சிலர் அதுவும் கேபின் அருகில் இருப்பவர்கள் எல்லோரும் நம்மவரே. அவர்களது செயல்/பேச்சு எல்லாம் மதுரை/சென்னை ஆட்டோக்காரர்களை நினைவுபடுத்தும். கண்டோன்மெண்ட் ஏரியாவிலும் இந்த பிரச்சனை அதிகம்தான். நான் இங்கு வந்த புதிதில் 25 பைசா சில்லரையை சரியாக எண்ணி எடுத்து தந்த ஆட்டோ டிரைவர்கள் அதிகம். இன்று பெங்களூர் மாறி விட்டது. எல்லாம் சாப்ட்வேர் வளர்ச்சியால் ஏற்பட்ட வயிற்றெறிச்சல்தான். ஆனால் சென்னை-மதுரையில் வெளிமாநிலம் என்றெல்லாம் வேற்றுமை கிடையாது. எல்லோரிடமும் ஏமாற்றுகிறார்கள்...என்ன செய்வது?


ச.பிரேம்குமார் |

சென்னை ஆட்டோக்கார‌ர்க‌ளுக்கு பெங்க‌ளூர் ஆட்டோக்காரர்க‌ள் ஒன்றும் ச‌ளைத்த‌வ‌ர்க‌ளே இல்லை. DIARY CIRCLE'ல் நின்று கொண்டு ம‌டிவாலாவிற்கு வ‌ருவீர்க‌ளா என‌ கேட்டாலும், மெஜெஸ்ட் வ‌ருவீர்க‌ளா என‌ கேட்டாலும் ஒரே ப‌தில் தான் 'இல்லை வ‌ராது'.

அட‌, எங்கே தான்ப்பா வருவீங்க‌?

ஊருக்கு புதுசுன்னு தெரிஞ்சிட்டா போதும், அதோட‌ காலி

என்ன‌ செய்யுற‌து? வீட்டுக்கு வீடு வாச‌ப்ப‌டி. ஆட்டோவுக்கு ஆட்டோ சிக்க‌லு :)


Geetha Sambasivam |

இக்கரைக்கு அக்கரை பச்சை! :(((((((


வல்லிசிம்ஹன் |

Gopi,
nERRu inge Dubai yil, avasaraththukku taxi kooppittapothu avarum 7rupaai kodukka vendiya idaththukku 20 vaanginaar.

varuththamaakath thaan irukku.


வல்லிசிம்ஹன் |

ottunar andai maanilaththavar.
Indian enkiRa uNarvukkuk kooda idamillai.
THanks for sharing yr thoughts.


உண்மைத்தமிழன் |

தம்பீபீபீபீபீபீ

மெட்ராஸ் வந்து பாரு.. இந்த கன்ட்ரி, இந்த ஸ்டேட், இந்த ஜாதி, இந்தாளுகன்னுல்லாம் இல்லை..

மானாவாரியா ஒரே போடுதான்.. விருகம்பாக்கத்துல இருந்து கோயம்பேடு போறதுக்கு 60 ரூபா. இல்லேன்னா நடந்தே போயிருன்றுவாங்க..

நமக்கு இருக்குற அவசரத்துக்கு போறதைத் தவிர வேற வழியில்லை..

ஆனாலும் இப்பத்தான் ஷேர் ஆட்டோ வந்ததுனால கொஞ்சமா 10 ரூபாய்ல போய்ச் சேர முடியுது..

இதுல ஜாதி, மதமெல்லாம் இல்லப்பா.. ஒரே நோக்கம்தான்.. பணம் சம்பாதிக்கணும்.. அம்புட்டுத்தான்..