சிறுகதை
Google Buzz Logo

ப்ருந்தாவனத்தின் லட்சக்கணக்கான வருகையாளர்கள்(சரி. சரி. கொஞ்சமே கொஞ்சம் பேர்) கேட்டுக் கொண்டதால் சில காலம் முன் நான் முயற்சித்த சிறுகதையின் மறுபதிப்பு...


(வருகையாளர்கள் - வார்த்தைக்கு நன்றி: பிச்சைப்பாத்திரம் சுரேஷ் கண்ணன்)

பதிக்க ஒன்னுமில்லைன்னு பழசை தூசி தட்டிப் பதிச்சாலும் அலட்டலுக்கு ஒன்னும் கொறச்சலில்லை.

மாயமான்

சென்னையின் புறநகர் பகுதிகளுள் ஒன்றான இந்தப் பகுதிக்கு நான் எஸ்.ஐயாகப் பதவியேற்று ஒரு வாரம் ஆகிறது. இன்னும் மனைவி, குழந்தைகளை கூட்டி வரவில்லை.

சென்னைக்கு அருகாமையில் இருந்தாலும் நகரின் பாதிப்புகள் குறைவாகவே இருந்தது. பதவியேற்றவுடன் நான் கவனிக்க வேண்டிய முதல் விஷயமாக் இருந்தது ஊருக்குள் திருட்டுத் தொல்லை மலிந்துவிட்டது என்பதே.

முந்தய திருட்டுக்களில் துப்பு கிடைக்குமா என்று பார்க்க ஆரம்பித்தேன். பொதுவாக இத்தகைய "மாஸ் தெஃப்ட்" கேஸ்களில் பெரும்பாலும் ஒரு கும்பலே சம்பந்தப்பட்டிருக்கும். அனைத்து திருட்டுக்களுக்கும் ஒருவித ஒற்றுமை இருக்கும். ஆனால் எஃப்.ஐ.ஆர் ஃபைல்களைப் புரட்டியதில் ஒன்றும் தேறவில்லை.

மாலையில் ரெகுலர் டியூட்டி முடிந்ததும் "நைட் பீட்"க்கு செல்லும் கான்ஸ்டபிள்களுக்கு பின்னால் அவர்களுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து செல்ல ஆரம்பித்தேன்.

"நைட் பீட்"க்கு செல்லும் கான்ஸ்டபிள்கள் சுமார் 3 மணியளவில் தூக்கம் வருவதைத் தவிர்க்க பஸ் ஸ்டான்ட் டீக்கடையில் டீ குடித்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறிய பிறகு மீன்டும் 6 மணிவரை ரவுன்ட்ஸ் வந்துவிட்டு ஸ்டேஷனுக்கு வந்து ரெஜிஸ்டரில் கையெழுத்திட்டு "நைட் பீட்" முடிப்பர்.

முதல் இரண்டு நாட்கள் அவர்களைப் பின்தொடர்ந்ததில் ஏதும் கிடைக்கவில்லை.

மூன்றாம் நாள் இரவு,

கான்ஸ்டபிள்கள் "நைட் பீட்"க்கு கிளம்பியவுடன் அவர்களுக்குத் தெரியாமல் வழக்கம் போல அவர்களைத் தொடர்ந்தேன். நான்கைந்து தெருக்கள் சுற்றியபின் இன்று புதிதாக சேர்க்கப்பட்ட ரூட்டில் நடக்க ஆரம்பித்தார்கள். சற்றே இடைவெளி விட்டு நானும்.

திடீரென்று அவர்களைக் காணவில்லை. திரும்பி அவர்களைத் தேடி நடந்ததில் வழி தவறிவிட்டேன். சரி திரும்ப வந்த வழியிலேயே திரும்பிவிடலாம் என்று நினைத்துக்கொண்டே நடந்தபோது "உர்ர்ர்ர்ர்ர்ர்..." என்றபடி என் மீது பாய்ந்தது அது.

சுதாரித்துகொண்டு எழுந்து பார்த்தேன். என் இடுப்புயரத்திற்கு ஜெர்மன் ஷெப்பர்டையும் ராஜபாளையத்தையும் கலந்து உருவாக்கிய மாதிரி நின்றுகொண்டிருந்தது அந்த நாய். ஜெர்மன் ஷெப்பர்டா? ராஜபாளையமா? எங்கு தப்பு நடந்தது என்றெல்லாம் மனதுக்குள் பட்டிமன்றம் நடத்த நேரமில்லை. ஆபத்து என அட்ரினலின் மூளைக்குணர்த்த ஓட ஆரம்பித்தேன்.

நான்காம் வகுப்பு படித்த போது ஒரு தெரு நாய் என்னைக் கடிக்கும் வரை நான் நாய்க்கு பயப்படாமல் தான் இருந்தேன். அன்று யாரோ அதற்கு உணவிடாமல் வம்பு செய்திருக்கிறார்கள் என்று எனக்கெப்படி தெரியும்? காரணமே இல்லாமல் அது என்னை கடித்துக் குதறியதில் மாலைமலரில் "சம்பவம் நடந்தபோது" என ஆரம்பிக்கும் நாலாம்பக்கச் செய்தியானேன்

அன்று முதல் இப்போது மிடுக்கான எஸ்.ஐ ஆன பிறகும் கூட எனக்கு நாய் என்றால் அடிமனதில் ஒரு கலக்கம்தான்.

நான் ஓட ஆரம்பித்தவுடன் நாய் மேலும் உற்சாகமாகி என்னைத் துரத்த ஆரம்பித்தது. ஓடி ஓடி களைத்து போன நான் கடைசியாக அந்த அபார்ட்மென்ட் பின்புறமாக இருந்த தென்னை மரத்தில் ஏறி மொட்டை மாடியில் குதிதேன். அடடா, கிராமத்தில் சிறுவயதில் மரமேற கற்றுக்கொண்டது எவ்வளவு நல்லதாப் போச்சி என்று எண்ணியபடி நிம்மதிப் பெருமூச்சு விட்டேன் நான். சற்று நேரம் உறுமிய நாய் ஏமாற்றத்தில் தலையைத் தொங்கப் போட்டபடி திரும்பி ஓடியது.

கீழே இறங்கி வர படிகளைத் தேடினேன். படிகளுக்கு போகும் வழியின் கதவு தாழிடப்பட்டிருந்தது. மொட்டை மாடியை சுற்றிப்பார்த்ததில் மழைநீர் சேகரிப்புக் குழாய் தெரிந்தது. போலீஸான என்னை இப்படி திருடன் போல குழாய் மூலம் இறங்க வைத்த நாயை சபித்த படி மெதுவாக குழாயை பிடித்தபடி இறங்க ஆரம்பித்தேன்.

முதல் மாடியில் உள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றின் பின்புறம் வந்தபோது வென்டிலேட்டர் வழியாக சில பேச்சுக்குரல்கள் கேட்டது. சற்றே கவனித்ததில் நான்கைந்து பேர் பேசிக்கொள்வது காதில் விழுந்தது.

"இன்னிக்கு எம்.ஜி.ஆர் நகர்ல நாலஞ்சி மாயமான் பாத்து வச்சிருக்கேன்"

"நான் கடைவீதியில ஒரு மாயமான் பாத்து வச்சிருக்கேன்"

"சரி எல்லாரும் ஆளுக்கொரு ராமனை எடுத்துக்கினு போய் ஒவ்வொரு மாயமானா அடிச்சிகினு வாங்க"

ஒன்றும் புரியவில்லை என்றாலும் மனதுக்குள் ஏதோ தப்பு நடப்பதாகப் பொறி தட்டியது. எட்டிப்பார்த்ததில் ஒரு மேஜை நிறைய பேனாக்களாக தெரிந்தது. எல்லாரும் ஆளுக்கு ஒரு பேனாவை எடுத்துக்கொண்டு செல்ல ஆரம்பித்தனர்.

எல்லாரும் சென்றபின் ஒருவன் மட்டும் அங்கேயே உறங்கிப்போனான்.

அப்பார்ட்மென்ட் நம்பர், பெயர் எல்லாவற்றையும் மனதில் குறித்துக்கொண்டு ஸ்டேசனுக்கு திரும்பினேன்.

மறுநாள் காலை அந்த அப்பார்மென்ட்டுக்கு சில கான்ஸ்சபிள்களொடு சென்றபோது முன்தினம் இரவு அங்கேயே உறங்கியவன் இருந்தான். விசாரனைக்கு வந்திருப்பதாகச் சொல்லாமல் புதிதாக ஊருக்கு வந்திருப்பதாகவும் இந்த வீடு வாடகைக்கு கிடைக்கும் என்று ஒரு ப்ரோக்கர் சொன்னதாகவும் சொல்ல, வாடகைக்கு இந்த வீடு கிடைக்காது என்று கூறினான். மெதுவாக பேச்சு கொடுத்தேன். அவன் நூதனப்பொருள் இறக்குமதி செய்து இன்டர்நெட் மூலம் விற்பனை செய்துவருவதாகச் சொன்னான்.

ஒரு பேனாவை எடுத்துக்காட்டிய அவன், "இது ஒரு மேஜிக் பேனா சார், எதுமேல வேணா எழுதலாம், எழுத்து சாதாரணமா கண்ணுக்கு தெரியாது. எழுதினத பாக்கனும்னா ரூபா நோட்டுல கள்ள நோட்டான்னு கண்டுபிடிக்கரமில்லியா அந்த UV பேனா லைட்ட இதுமேல அடிச்சம்னா தெரியும்" என்றான்.

"மாய மானின்" அர்த்தம் எனக்கு மெதுவாக விளங்க ஆரம்பித்தது. அவனை பிடித்து "உரிய மரியாதை" கொடுத்து விசாரித்ததில் பகல் நேரத்தில் கினற்றுக்கு மருந்தடிக்க, குழாய் ரிப்பேர் செய்ய, ட்ரெய்னேஜ் சுத்தம் செய்ய என்று வீடுகளின் உள்ளே வந்து நோட்டமிட்டு வீட்டின் முன் சுவற்றில் இந்த மாயப் பேனா கொண்டு வீட்டின் அமைப்பு திருடிவிட்டு தப்பிக்க வசதியான வழிகள் எல்லாவற்றையும் எழுதிவிட்டு வந்து, இரவில் ஆளிலாத வீடுகளில் புகுந்து கொள்ளை அடிப்பதாக ஒப்புக்கொண்டான்.

நோட்டமிட்டவன் தானே கொள்ளையடிக்கப் போகிறான், இந்த பேனா கொண்டு எழுதவேண்டிய அவசியம் என்ன என்று விசாரித்ததில், திருடும் போது மாட்டிக்கொண்டால் உடனே மாட்டியவனை வேறு ஊருக்கு அனுப்பிவிடுவதாகவும் அது போல வேறு ஊரில் இருந்து புத்தாக இங்கு கொள்ளையடிக்க வருபவனுக்கு வசதியாக இருக்க அது போல எழுதிவைப்பதாக கூறினான்.

"ஆகா! ஒரு குரூப்பாத்தான்யா அலையறனுவ"ன்னு நடிகர் வடிவேலு பொல மனசுக்குள் நினைத்தபடி சம்பதப்பட்ட அத்தனை பேரையும் உள்ளே தள்ள ஏற்பாடு செய்துவிட்டு இன்ஸ்பெக்டராகும் ப்ரமோஷன் கனவோடு வீடு திரும்பினேன்.

சாம்பிளுக்கு எடுத்து வந்த UV லைட் பேனாவை முன் சுவற்றில் அடித்த போது. வீட்டின் மொத்த அமைப்பையும் விலாவரியாக எழுதியிருந்தது தெரிந்தது. "பி.கு: இது எஸ்.ஐயின் கவர்மென்ட் குவார்ட்டர்ஸ் எனவே இந்த அமைப்பில் இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் எந்த மாற்றமும் இருக்காது" என்று வேறு எழுதியிருந்தது.

"அடப்பாவிகளா! அங்க கைவச்சி இங்க கைவச்சி அடிமடியிலயே கை வச்சிருப்பானுக போல இருக்கே!". முதல் வேலையாக இது போல எந்தெந்த வீடுகளில் எழுதியிருக்குன்னு கண்டுபிடிச்சி அழிக்க வழி பண்ணனும். நாளைக்கு வேற ஊர்ல இருந்து மனைவி, குழந்தைகள்ளாம் வர்றாங்க அதுக்குள்ள நம்ம வீட்ல மட்டுமாவது அழிக்கனும்னு நெனச்சிகிட்டேன்.

1 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு karthik சொன்னது...

where we can get this pen machi?